Archive for December, 2017

#சோழனுடன்_ஒருநாள்
     இந்த ஒருநாள் முழுவதும் கற்பனையே., ஒரு டெர்மினேட்டர் திரைப்படம், மேட்ரிக்ஸ் ரீவ்வெளிவேசன் போன்ற கதைக்களம் என்று கருத வேண்டாம்.   என்னதான் காலம் வெகு வேகமாக சென்றாலும் அவை ஒரு குறுகிய வட்டத்தினுள்ளே நம்மை அடைந்துவிடும்.  காலத்தை கடந்து வாழ வெகு சிலரால் மட்டுமே முடியும்.  அத்தனை சாத்திய கூறுகளும் ஒருங்கே அமையப்பெற்ற ஒரு மாபெரும் சக்கரவர்த்தி உடன் ஒருநாள்.  இன்றைய காலகட்டத்தில் டைம் மெசின் போன்ற தொழில்நுட்பங்கள் வளர தொடங்கினாலும் அவை இன்னமும் கேள்விக்குரியதே, சரி அந்த ஆய்வுகளை புறந்தள்ளிவிட்டு நாம் பயணிப்போம்.  ஒரு சராசரி வழிப்போக்கனிடம் இருந்து கதைகளத்தை நகர்த்துவோம்..
     நடுத்தர வயது, சோடாபுட்டி கண்ணாடி, எண்ணெய் தடவிய நன்கு சீவி அதனை அழுத்தி அதனுள்ளே இரண்டு நெளிவுகளை அமைத்த சிகை அலங்காரம். எழுபதுகளில் இருந்த  பேஷன் உடை அதாவது நீளமான பெல்ஸ் பேண்ட் மற்றும் முழு சட்டை கட்டம் போட்டது இல்லை நீளமான கோடு போட்டது.  பாட்டா செருப்பு கையில் நோக்கிய 1100 மாடல், சுமார் ஐந்தரை அடி உயரம், சற்று பூசனார் போன்ற உடல் வாகு நம் கதையின் நாயகன்.   காலை நேரம் சுமார் ஒன்பதரை மணி இருக்கும்,  பரபரப்பான தஞ்சை சாலையில் கீழ வாசலில் இருந்து விண்வெளிக்கு செல்லும் ராக்கெட் வேகத்தில் தஞ்சை பழைய பேருந்து நிலையம் நோக்கி நடைபோட்டு கொண்டு இருந்தான் ராஜேஷ்.
    வீரனே சற்று நில்., என்ற ஒரு கம்பீர குரல் .. அங்கு செல்லும் யாரும் அவர்களை கண்டுகொள்வதாக இல்லை.  ஏனோ ராஜேஷ் சிறிது நின்று திரும்பி பார்வையை செலுத்தினான்.  மீண்டும் அதே குரல் வீரனே எங்களுக்கு உதவிட வேண்டுகிறோம் என்ற வாக்கியம் அவன் காதுகளில் தெளிவாக விழுந்தது.  ராஜேஷ் தனது சோடாபுட்டியை கழற்றி சட்டையின் நுனியில் துடைத்து விட்டு பின்பு மீண்டும் அதனை உயர பிடித்து தெளிவாக உள்ளதா என கண்டு அதனை அணிந்துகொண்டு அவர்களை உற்று நோக்கினான்.  கிட்டத்தட்ட அவர்களை பார்க்க நாடகத்தில் வேடம் போடுபவர்கள் போல்  இருந்தார்கள். மேலும் அதே போன்ற உடை அணிந்து காணப்பட்டது ராஜேஷுக்கு எந்த ஒரு எதிர்பார்ப்பையும் உண்டாக்கியிருக்கவில்லை.  அதற்கு மாறாக இவர்கள் நம்மிடம் காசு ஏதேனும் கேட்டுவிடுவர்களோ என்று யோசித்தான் ராஜேஷ்.  பிறகு ஏனோ இரண்டமாவரை பார்த்த பிறகு அவனுள் ஒரு உள்ளுணர்வு அவனை அறியாமலேயே அவர்கள் கிட்டே அவனை கொண்டு சென்று நிறுத்தியது.
    வீரனே எங்கள் குரலுக்கு செவி சாய்த்ததில் யாம் பெரும் இன்பம் கொண்டோம்.   மேலும் எங்களுக்கு உமது உதவியை பெற்றிடவே உம்மை அழைத்து கூவினோம்.  மிகவும் பரபரப்பாக இந்த மனிதர்கள் காலையில் இருந்து இவ்வழியே சென்று கொண்டு இருக்கிறார்கள் யாரும் எங்களை கவனித்து இருக்க வில்லை நீவிர் ஒருவரே எங்கள் சத்ததிற்கு செவி சாய்த்து வந்துள்ளாய் மிக்க மகிழ்ச்சி காலை முதல் கால் கடுக்க நின்று காய்ந்து போய் உள்ளோம் எங்களுக்கு உமது உதவி தேவை வீரனே என்று உரையை முடித்தார்.
     வீரனே வீரனே என்ற வரியில் ராஜேஷ் சற்று மதிமயங்கி போய்த்தான் நின்றான்., முழுக்கை சட்டையை சற்று மடித்து சுருட்டினான்., சட்டையில் முதல் பொத்தானை அவிழ்த்தும் விட்டான் ., இல்லாத மீசையை கரம் கொண்டு நீவி விட்டான். சுருண்டு போன காலரை நிமிர்த்தி விட்டான்.  தாடியை தடிவிக் கொண்டே  நேரே நிமிர்ந்து அவர்களை பார்த்து நீங்கள் இரண்டு பேரும் யாரு,  எந்த ஊரு… எங்க போகணும் என்று சரமாரி கேள்வி கணைகளை தொடுத்தான்.
     வீரனே எனது பெயர் மும்முடி சோழ பிரம்மாராயன் கிருஷ்ண ராமன் என்றார்.  ராஜேஷ் சற்று குழம்பினான்,  ரொம்ப நீளமாக இருக்கிறதே சிறியதாக சொல்ல முடியாதா என்றான்.   கிருஷ்ண ராமர் வாய்விட்டு சிரித்தார்., ஏன்யா சிரிக்கிறீங்க என்றான் ராஜேஷ்… என் பெயரே பெரியது என்கிறாயே இவரது முழுப்பெயரை கேட்டால் என்ன சொல்வாய் என்று நினைத்து சிரித்தேன் வீரனே என்றார் க்ருஷ்ண ராமர்.  சரி சரி எனக்கு நேரமாகிவிட்டது சீக்கிரம் சொல்லுங்க எதற்கு என்னை கூப்பிட்டீங்க எங்கிட்ட காசு எல்லாம் ஒன்றும் இல்லை நானே ஐந்து ரூபாய் சாப்பாட்டுக்கு டோக்கன் போட போய் கொண்டு இருக்கிறேன் இப்பவேய் மணி 10 என்றான் ராஜேஷ்.  என்ன சாப்பாட்டிற்க்கு ஒட்டமா என்று கம்பிர குரலுடன் மரத்தின் அருகில் நின்றுகொண்டிருந்த மாமன்னர் இராசராச சோழன் வெளி வந்தார்.  உங்களுக்கும் வேண்டும் என்றால்  பத்து ரூபாய் பணம் கொடுங்கள் என்றான் ராஜேஷ்.  கம்பீர சிரிப்புடன் என்ன உளறுகிறாய் வீரனே ஏதேதோ புது பெயர்களை சொல்லி எங்களிடம் கேட்கிறாய் என்றார்.  எங்களுக்கு அதெல்லாம் ஒன்றும் வேண்டாம் அரண்மனைக்கு செல்லும் வழியை எங்களுக்கு சொல் என்றார்.  அரண்மனைதானே இந்த தெருவில் நுழைந்தால் அரண்மனை வந்துவிடும் என்று சொல்லிவிட்டு வேகமாக நடையை போட்டான் ராஜேஷ்.  நன்றி வீரனே என்று சொல்லிவிட்டு இரண்டு பேரும் தெற்கு பக்கத்தில் இருந்து வடக்கு பக்கம் நோக்கி விரைந்தர்கள்கள்.
அமைச்சரே, இது என்ன அதிசயம் தேரின் வடிவம் எல்லாம் முரண்பாடாக உள்ளதே, மேலும் புரவிகள் எங்கே வெளியில் காணப்படவில்ல, அரசே புரவிகளை இரும்பு பெட்டியின் உள் பக்கமாக வைத்து தேரை இயக்குகிறார்கள்.  இது என்ன கொடுமை அமைச்சரே, மனிதர்களை எல்லாம் இரும்பு பெட்டியின் உள்ளே அடைத்து வைத்து எங்கே கொண்டு செல்கிறார்கள்.  எமது நாட்டில் அடிமை நிலையா, உடனே இராசேந்திரனுக்கு அழைப்பு விடுங்கள் படைகளை எழுப்பி விடுங்கள் என்றார் சற்று கோவமாக.  அரசே சற்று அமைதி காத்தருளுங்கள்.  மேலும் நாம் முழு விவரத்தையும் அறிந்துக் கொண்டு படைகளை எழுப்புவோம் என்றார் கிருஷ்ண ராமர்.  அதற்குள் அரண்மனை சாலையை அடைந்து விட்டார்கள் இருவரும்.  ஏதேது இந்த இரண்டு சக்கரம் ஒட்டுபவர்கள் படு வேகமாக செல்கின்றனரே., அது என்ன தலை கவசம் போருக்கு செல்கிறார்களா? எனக்கென்னவோ இவன் புறமுதுகிட்டு ஓடி வருபவன் போல் தெரிகிறது அரசே ஈழத்தில் ஒருமுறை உங்களிடம் தோற்று ஓடினார்களே ஒரு அசுர ஓட்டம் அதை மிஞ்சி விடுவார்கள் போல இருக்கிறது என்று கூறி இருவரும் சிரித்தார்கள்.  ஆம் அமைச்சரே எப்படியும் அவர்கள் இனி ஈழ திரும்பி இருக்க மாட்டார்கள் என்று பேசிக்கொண்டே சாலையை கடக்க நகர்ந்தார்கள், அதற்குள் ஒரு ஆட்டோ வேகமாக பிரேக் போட்டு வண்டியை நிறுத்தினான்., யோவ் ஒழுங்கா ரோட்டை பார்த்து போங்க என்று திட்டிக்கொண்டே சென்றான்.  அமைச்சரே அந்த இரும்பு பெட்டியுடன் அவனை சேர்த்து நசுக்கி விடவா என்று சீறினார்.  வேண்டாம் அரசே தற்பொழுது நாம் இருவரும் மாறுவேடம் பூண்டுள்ளோம் பொறுமை காத்திடுங்கள் அரசே என்றார் கிருஷ்ண ராமர்.
     சாலையை கடந்த அரண்மனை வளாகத்தை இருவரும் அடைந்தார்கள்.  ஏதெது மிகப்பெரிய சுவர் எழுப்ப பட்டு இருக்கிறது.  வேலைப்பாடுகள் எல்லாம் சுவற்றில் பழுது அடைந்து உள்ளதே.  இது என்ன எழுத்து பலகையில் உள்ள எழுத்து உருக்கள் நம் மொழி போல இல்லையே.  நாம் தஞ்சைக்கு தானே வந்துள்ளோம் அமைச்சரே.  ஆம் அரசே இது நமது தஞ்சை தான் மண்ணின் மனம் அதனை தாங்கள் உணரவில்லையா.  ஆனால் நமது அரண்மனை எங்கே அரசே ஒருவேளை பாண்டியர்கள் நமது நகரத்தை சேத படுத்தி இருப்பார்களோ., இல்லை அமைச்சரே பாண்டியர்கள் கூட நமது நகரத்தை இடித்து, அழித்து, எரித்து இந்தளவிற்கு பாழாக்கி இருக்க மாட்டார்கள்.  இதெல்லாம் இந்த நகர வாசிகளின் நரக வாசம் அமைச்சரே என்று பெருமூச்சை சற்று மெதுவாக விட்டபடி கூறினார் மாமன்னர் இராசராச சோழர்.
      அதற்குள் இருவரும் அரண்மனை வளாகம் முழுவதும் சுற்றி பார்த்தார்கள் சோழர்களுக்கான சுவடே இல்லை என்பதே நன்கு அறிந்துக் கொண்டு வாயிலில் இருக்கும் வேப்ப மர நிழலில் வந்து அமர்ந்தார்கள்.  அருகில் உள்ள ஓர் திண்ணை கட்டையில் நன்கு குறட்டை விட்டு உறங்கி கொண்டு இருந்தான் நமது நாயகன் ராஜேஷ்.  அமைச்சரே கவனித்தீரா இந்த வீரனை பகலிலேயே நன்கு உண்டுவிட்டு உறக்கம் கொண்டு இருக்கிறான்.  இவனை எல்லாம் நம்பி இந்நாடு எப்படி பாதுகாப்பாக இருக்கும் என்று கூறிவிட்டு கையில் இருந்த உடை வாளை உருவாமல் அதனை கொண்டு அவனை தட்டி எழுப்பினார் ராசராசர்.
    உச்சி வெயிலில் உறக்கம் கொண்டு இருந்த நமது நாயகன் ராஜேஷ் பாதியிலேயே உறக்கம் தொலைத்து எழுந்தான்.  தனது கண் கண்ணாடியை எடுத்து அணிந்துக் கொண்டு அவர்களை பார்த்தான்.   நீங்களா என்னய்யா அரண்மனை எல்லாம் எப்படி சுற்றி பார்த்தீர்களா எப்படி இருக்கிறது.  வீரனே அரண்மனைக்கு வழி கேட்டால் நீ குதிரை லாயத்திற்கு வழி காட்டி உள்ளாய் என்றார் கிருஷ்ண ராமர்.
      இதுதான்யா எங்க ஊர் அரண்மனை, எவ்ளோ பேர் வருகிறார்களா தெரியுமா , வெளி நாட்டில் இருந்து எல்லாம் சுற்றி பார்க்க இங்கே வருவாங்க.  பிரகதீஸ்வரர் கோவில் உலக பேமஸ் தெரியுமா உங்களுக்கு, தெரிகிறது அழகிய தஞ்சை நகரை நரகமாக்கி வைத்துள்ளரீர்கள் என்று நன்றாக தெரிகிறது.
     படைகள பணியை புறக்கணித்து விட்டு நீ பகலிலே இப்படி உண்டு உறங்கி சோம்பி திறிகிறாயே இதற்கு என்ன தண்டனை என்று தெரியுமா உனக்கு,  இப்படி செய்ய யார் உங்களுக்கு அனுமதி தந்தார்கள்.  இதெல்லாம் கேட்க நீங்கள் யார்? மூடனே அரசர் முன்பு இப்படி ஆனவமாகவா பேசுவாய் என்று அடிக்க சென்றார் கிருஷ்ண ராமர்.  அமைச்சரே பொறுங்கள் நாட்டின் அரசியல் நிலையில் நாம் கவனம் செலுத்த வேண்டும் என்று அவரை தடுத்தார்.  ராஜேஷ் விழி பிதுங்கி நடுங்கி போய் நின்றான்.   ஒருவேளை இவங்க பைத்தியமா என்று யோசித்தேன்.  என்ன யோசிக்கிறாய் வீரனே என்றார் அரசர்.  சற்று நிதானித்து கூறினான் வேலை வெட்டி இருந்தால் நான் ஏன் இப்படி இருக்கேன்.  நான் படிச்சது பி.இ சிவில் இன்ஜினியரிங்.  என்ன உளறுகிறாய்., உனக்கு என்ன தொழில் தெரியும் என்றார் அரசர்.  கடிட்ட வல்லுநர் என்றான்.  அருமையான கலை நம் சோழ நாட்டில் இவ் வல்லுநர்க்கு  வேலை வாய்ப்பு இல்லையா என்ன கொடுமை இது கலைகளின் பிறப்பிடத்தில் ஒரு வேலை இல்லையா என்று கோபம் கொண்டார் மன்னர்.
     சரி இப்போது எங்களை பெருவுடையார் ஆலயத்திற்கு அழைத்துக்கொண்டு போ உனக்கு அங்கே வேலை கிடைக்க ஏற்பாடு செய்கிறேன் என்றார் அரசர்.   உண்மையாகவா எனக்கு அங்கே வேலை வாங்கி தருகிறீர்களா , சரி ஆனால் அந்த கோவில் எங்க இருக்கு என்று தெரியாதே நான் எங்க இருக்குனு கேட்டு சொல்கிறேன்.  என்ன இது பெருவுடையார் கோவில் தெரியாதா உனக்கு இவ்வூரிலேயே பெரிய கோவில் அதுதானப்பா என்றார் கிருஷ்ண ராமர்.   ஓ.. பிரகதீஸ்வரர் கோவிலா அதுதான் எல்லாருக்குமே தெரியுமே.. அமைச்சரே இவர் என்ன சொல்கிறார், அரசே இவ்வீரன் நமது ஆலயத்தைதான் குறிப்பிடுகிறான். அப்படியென்றால் சரி வாருங்கள் செல்வோம் என்றார் அரசர். மூன்று பேரும் அரண்மனையில் இருந்து கோவிலுக்கு புறப்பட்டு சென்றனர்.
     வீரனே அந்த சிலை யாருடையது என்றார் கிருஷ்ண ராமர்.  அதுவா , அதுதான் இராஜராஜ சோழன் சிலை என்றான் ராஜேஷ்.  சொன்ன மாத்திரத்தில் அரசரும் , அமைச்சரும் வாய்விட்டு உரக்க சிரித்தார்கள், கேட்டீரா அமைச்சரே இதைத்தான் ராஜராஜன் சிலையாம் என்று கூறிவிட்டு மாமன்னர் மீண்டும் சிரித்தார்.   கண்டேன் அரசே என்று அமைச்சரும் பதில் கூறி சிரித்தார்.  ராஜேஷ் அவர்கள் இருவரையும் கண்கொட்டாமல் கண்டு நின்றான்.  அடுத்தநொடி, அஹா கண்டேன் நான் கட்டிய கயிலாய காட்சியைக் கண்டேன் என்று உற்சாகத்தில் துள்ளி குதித்தார் மாமன்னர்.  அஹா என்ன ஒரு கம்பிரம் இதை காண கண்கள் கோடி போதாது என்று எண்ணி உவகை அடைந்தனர் இருவரும்.   இதுவரை முன்னே சென்று வழிகாட்டிய ராஜேஷ் இவர்களுக்கு பின்னே வேகமாக ஓடும் நிலை.  இவங்களை நம்பி வேறு வந்து இருக்கிறோம் வேலை வாங்கி தந்து விடுவார்களா குழப்பமாக இருக்கிறதே என்ற படி வேகமாக நடையை போட்டான் ராஜேஷ்.  பெருவுடையார் ஆலயத்தின் அருகே செல்ல செல்ல அவர் மனம் ஆனந்த கூத்தாடியது.  அடடா எங்கே இங்கு இருந்த அகழி., நீரோட்டம் இன்றி வற்றி காணப்படுகிறதே, வாயிலை குறுக்கிய ஒரு கட்டுமானம் இது எவன் பார்த்த வேலை, நமது கோவிலின் முகப்பு மாற்றம் பெற்று உள்ளதே.  எனது #ராஜராஜேஸ்வரம் அடைந்துள்ள நிலையை கண்டு மனம் வேதனைக்கு உள்ளாகியுள்ளத்து அமைச்சரே.  அரசே நமது பெருந்தச்சனின் கட்டுமானம் இவர்களால் களைத்து விட முடியுமா என்ன, அங்கே பாருங்கள் கேரளந்தக திருவாயில்., அரசர் உள்ளே நுழைந்தார்., காந்தளூர் சாலை போர் நினைவிருக்கிறதா அரசே அதை எப்படி மறப்பேன் அமைச்சரே… என்று வாயிலின் கற்றலியை கரம் கொண்டு தொட்டு உணர்ந்து மகிழ்ந்தார்.  ராஜேஷ் விழித்தி கொண்டு நின்றான், வேலை கிடைக்குமா கிடைக்காதா என்ற பயம் வேறு உள்ளுக்குள். 
     அரசே உங்களுக்கான வருகையை அறிவித்து சிறப்பு வழிபாடுகள், போன்றவற்றை ஏற்பாடு செய்துவிடவா என்றார் கிருஷ்ண ராமன்.  வேண்டாம் அமைச்சரே, என்று கேரளாந்தக வாயிலை கடந்து உள் நுழைந்தார்.  ராஜராஜன் திருவாயில் சற்று திகைத்து நின்றார் அமைச்சரே எனக்கு ஒரு சந்தேகம்?  சொல்லுங்கள் அரசே , இல்லை நந்தி வளருமா அதுவும் சிறிது தூரம் முன் சென்று உள்ளதே என்றார்.  குணவன் கட்டுமானத்தில் பிழை காண முடியுமா அமைச்சரே… கிருஷ்ண ராமன் சற்று எரிச்சல் அடைந்தார்.  
    சோழ மண்டலம் முழுவதிலும் 118 ஊர்களிலிருந்து மெய்க்காவலர்கள் நியமிக்கப் பெற்றனர் எதற்காக இதனை வேடிக்கை காணவா என்று கொந்தளித்தார் கிருஷ்ண ராமன்.  அமைதி கொள்ளுங்கள் அமைச்சரே என்று அவரை அழைத்துக்கொண்டு ராஜராஜ வாயிலை கடந்து உள்ளே நுழைந்தார்கள்.  ஸ்ரீ விமானம் தங்கமுலாம் கொண்டு ஜொலிக்க கண்டேன் , இப்போது என்னவாயிற்று.  ஏன் இன்னும் எம்பெருமானுக்கு அபிஷேகம் செய்யவில்லை ஏன் கருவறை மூடிக் கிடக்கிறது என்று கேள்வி மெல் கேள்வி கேட்டு ராஜேஸ்யை திரும்பி பார்த்தார்.  அவன் செய்வதறியாது திகைத்து நின்றான்.  இராஜராஜன் கண்களை பார்க்கவே பயமாக இருந்தது அவனுக்கு.  
       ஏன் இன்னமும் ஆடர்கலை அரங்கேறவில்லை, இது என்ன இசை கலைஞர்கள் எங்கே ?  குழல், உடுக்கை, இலைத்தாளம், கொட்டி மத்தளம், கின்னரம், பறை, மெராவியம், வங்கியம், பாடவியம், வீணை, முத்திரைச்சங்கு, வாத்திய இசை ஒலிக்கவில்லையே., அமைச்சரே இக்கோயிலுக்கு  ஆண்டுதோறும் ஒரு லட்சத்துப் பதினையாயிரம் கலம் நெல்லும், 300 கழஞ்சுப் பொன்னும், 2000 காசுகளும் நிரந்தர வருமான கிடைக்க வழி செய்து உள்ளோம் அல்லவா? ஆமாம் அரசே..   

   

    ஆடவல்லானால் அளக்கபடும் நெல் கொள்முதல் சரிவர கிடைக்கிறது அல்லவா, ஆம் அரசே, பரிசாரகர், பண்டாரி, கணக்கர் ஆகியோர் ஊழியம் சரியாக செய்கிறார்கள் அல்லவா ,.  ஆம் அரசே, கீழ் கணக்கர்கள்? அவர்களும்தான் அரசே.  . ஒரு விளக்குக்கு நாள் ஒன்றுக்கு ஓர் உழக்கு நெய் வீதம் யாம் வழங்கிய ஆயிர கணக்கிலானா கால்நடைகள் மூலம் வரும்படி நெய் போக மீதம் அவர்கள் பயன்படுத்தி வருகிறார்கள் அல்லவா? ஆம் அரசே, இவை அனைத்தும் சந்திராத்தன் உள்ள வரை நிகழும் அல்லவா? ஆம் அரசே பிறகு இங்கு நடப்பது யாதும் அவ்விடம் இல்லையே என்று கிருஷ்ண ராமனை கலங்கிய கண் கொண்டு பார்த்தார்.  கிருஷ்ண ராமன் செய்வதறியாது மாமன்னரின் திருமுகத்தையே நோக்கினார்.  இரண்டு பேரையும் ராஜேஷ் மாறி மாறி பார்த்தான்.  அவன் உள்ளம் தவித்தது.  ராஜராஜனும் கிருஷ்ண ராமனும் நேராக படி ஏறி கருவறை நோக்கி நடந்தனர் அங்கே பூட்டிய கதவுகளை திறந்து உள்ளே பெருவுடையாரை நோக்கி சென்றனர்., இருவரும் எம்பெருமானுள் மறைந்து செல்வதை ராஜேஷ் கண் இமை மூடாது கண்டான், கண்களில் வழியே நீர் சிந்த கோவில் மணி ஓசை மாலை நான்கு மணி நடையும் திறந்தது. திடீரென்று சுய நினைவுக்கு வந்தவனாய் அருகில் இருந்த விளக்கு ஒன்று அணையபோவதை கண்டு திரியை தூண்டி விட்டான்., விளக்கு பிரகாசமாக எரிந்தது.

…..சிவா.